திங்கள், 7 டிசம்பர், 2009

வெறுந்தொட்டில்...


பட்டாம் பூச்சியொன்னு பறந்து வந்த வீட்டோரம் ,

பனைமரந்தான் விழுந்ததென்ன பாழழிஞ்சதென் நேரம் ...

குத்த வெச்ச நேரம் கொமரி நானழுததில்ல,

முக்கிப் பெத்த போதும் மூச்சடக்கிப் புடிச்சதில்ல...

விக்கித் தீரவில்ல நீ போன என்தாகம் ;

மக்கிப் போனதென்ன நான் வளத்த பூந்தேகம் ...

எஞ்சோட்டுப் பொண்டுகளும் நாம்பாக்கத் திரும்புதடி ,

அது பெத்த சிண்டுகளும் தல சாச்சு அரும்புதடி ....

நீ குடிக்க நான்சொரந்த பாலின்னுமிருக்குதடி ;

நாச்சுழற்ற நீயுமில்ல , சேல தெனம் நனைக்குதடி ...

வரப்போரம் நடக்கையில வெறுந்தொட்டில் சிரிக்குதடி ,

உனைத் தூக்கி நான்சொமந்த இடுப்பேனோ கனக்குதடி........

புதன், 18 நவம்பர், 2009

மொட்டக்கிணறு

அது ஒரு வெயில் குறையத் தொடங்கிய பின் மதியப் பொழுது...

பள்ளி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப மூன்று நாட்கள் மீதமிருக்கையில்.... வயதொத்த பிள்ளைகள் ஏதுமின்றி கன்னத்தில் கையூன்றி தெருவை வெறித்திருந்த அச் சிறுவனை தாங்கி நின்றது அப் பழைய வீட்டின் முகப்புத் திண்ணை...

தெரு முனையில் ஒரு அரவம் கேட்டு மெதுவாய் திரும்பினான்...

சாராய வெறி தலைக் கேறிய ஒருவன் கருத்த சட்டையில்லாத சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தான் ; அவனது அப்பனாயிருக்க வேண்டும் .

" பொழுதோட கம்பெனிக்கி வந்து பாப்பேன்! ........... லீ! நீ மட்டும் அங்கில்லாத கொளத்து மேடு, கரும்புக்காடுன்னு சுத்தீட்டு திரிஞ்ச ! மவனே இன்னைக்கி உனக்கு கொள்ளிதான்"...

நடை தள்ளாடி பக்கமிருந்த துணி துவைக்கும் கல் மீது சென்றமர்ந்தான் குடிகாரன்.
அப்பனின் பார்வை மறைந்ததும் ஏறத்தாழ ஏழெட்டு பொடியன்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்... பொதுவாக எல்லாருடைய உடையும் சீருடைதான் அரையில் சீவனற்றுத் தொங்கிய டவுசர்கள்.... தைத்த தைக்காத கிழிசல்களில் அணிந்தவன் வாழ்நிலை தொக்கி நின்றது....

ஒரு சில தாவல்களில் தெருவின் மறுமுனையினைக் கடந்த அப் படை கூச்சலோடே தனை இழுப்பதாய் உணர்ந்தவன் திண்ணை நீங்கித் தெருவில் நடக்கலானான்...
அந்த ஊரின் குளத்து மேட்டு மைதானம் வலுசுப் பசங்களுக்கானது;
துருவேறிய சைக்கிளும், துவைக்க மாட்டாத லுங்கியுமுள்ள மைனர்கள் கிரிக்கெட்டு விளையாடும் செம்புழுதிக் காடு...

மெதுவாய் நுழைந்த சட்டையில்லாத சிறுசுங்க படை கிரவுண்டுக்கு பின்னாடி உள்ள மொட்டக் கெணத்துக்கு குறி வெச்சுதுங்க... அதுக்குள்ள அங்க வந்த திண்ணை வீட்டுப் பையன மொறச்சுப் பாத்துட்டு அப்பன்கிட்ட திட்டு வாங்கின அந்த மொதப் பையன் சொன்னான்

" டேய் ! நீங்கெல்லாம் போயி அவனுங்க கெணத்து பக்கம் வராத பாத்துக்குங்க! போனவாரம் மட்டும் ஏழு பந்துக உள்ளார வுளுந்துருக்கு! பழச சேத்துனா எப்பிடியும் இருவதுக் கிட்ட தேறும் அப்பறம் ஒரு பேட்டக் கூட டிராக்டர் வூட்டுக் காரன் உள்ளார போட்டுருக்கான்"

" ஆளுக்கொரு பந்தாச்சும் குடுறா "

" என்ன மயிருக்கு ! தேவைக் ....... னா வுள்ளார எறங்குறது! " இது முன்னவன்....

அதுக்கு மேல எவனும் வாய் தொறக்குல!

அரசமரமொன்னு பாதிக் கெணத்துல இருந்து வேர் புடிச்சு வெளியேற, அதப் புடிச்சு உள்ள எறங்க ஆரமிச்சான் சட்டையில்லாத பையன்.

மீதி பொடுசுங்க எல்லாம் மெதுவா கெணத்த விட்டு கொஞ்சம் தள்ளி பெரிய பசங்க வராம காவல் காக்க தொடங்க, நம்ம திண்ண வீட்டு அருந்த வாலுஅவனுக்குப் பின்னாலேயே உள்ள எறங்க ஆரமிச்சுது....

இவன் கால் பட்டு கொஞ்சம் மண்ணு கருவாயன் முதுகுல விழ !

" டேய் மசுராண்டி ! வுளுந்தீனா மண்ட போளந்துரும் மூடிட்டு மேல ஏறு "

எதுவும் பேசாமல் இன்னொரு கிளையை பலமாகப் பற்றிக் கொண்டு அவனை விட ஒரு அடி கிழே போனான் திண்ண வீட்டு கண்ணு குட்டி....

சொல்லிக் கேக்கற சீவனில்லைன்னு தெரிஞ்சதும் கருவாயன் அவன் வேலைய பாக்க ஆரமிச்சுட்டான்....

பாழடைதிருந்த கிணற்றின் உட்புறத்தின் இருள் கொஞ்சம் விலகத் தொடங்கியிருந்தது.
" டேய் ! நீ ஏண்டா உள்ளார எறங்குற? பந்து வேணுமா! "
கறுத்த சிறுவனின் கேள்விக்கு வெறுமனே தலை ஆட்டியவாறு
மெதுவாய் இறங்கிய திண்ணை வீட்டு சிறுவனின் பார்வையில் இரண்டு மூன்று ரப்பர் பந்துகள் கிணற்றின் அடிப்புறத்தில் தென்பட்டன...

சற்றேறக் குறைய ஏக சமயத்தில் இருவரும் கிணற்றின் அடிப் புறத்தினை அடைந்தனர்.
இது ஒரு காலத்தில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்த கிணறென்று சொல்வதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லாதபடிக்கு வறண்டிருந்த கிணற்றினுள்ளே இருந்தவாறு மேலே பார்த்தால் கிமுவில் எதோ ஒரு பாதாளத்தில் தவறி விழுந்த உணர்விருக்கும்...
அங்காங்கே இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்த " கோஹினூர் எக்ஸ்ட்ரா டைம் ", ''ஸ்டே ப்ரீ" ,
உள்ளிட்ட சமாச்சாரங்களின் கவர்கள் கிழிந்த நிலையில் காணப் பட்டன.
மூன்று பந்துகளையும் கையிலெடுத்துக் கொண்ட திண்ணை வீட்டு சிறுவன் தனக்கு முதுகு காட்டியவாறு நின்றிருந்த கறுத்த சிறுவன் என்ன செய்கிறான் என்பதை கூர்ந்து நோக்கலானான் ..

அவனோ மறுபுறமிருந்த ஒரு பொந்திலிருந்து மஞ்சள் நிறப் பையொன்றை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான். பாதி பிரிந்திருந்த
அப்பையிலிருந்து சில்லறைக் காசுகள் சிலவும், மஞ்சள் நிறப் பொடியும் சிதறி விழலாயின... அதை மேலாக மூடியவாறு அருகிலிருந்த ஒரு பெரிய கல்லின் மீது சென்றமர்ந்த கறுத்த சிறுவன் எதோ நினைத்தவனாக சற்றே நிமிர்ந்து திண்ணை வீட்டு சிறுவனைப் பார்க்க, அந்த பொட்டலத்தை பார்த்து வெலவெலத்துப் போய் நின்ற வண்ணம் இருந்தான் அவன்...

பின் மெதுவாக அந்த பையினைத் திறந்து கீழே கொட்டினான்.
மனித உடலின் எதோ ஒரு பாகத்தின் எலும்பு மஞ்சள் பூசி நூலால் சுற்றப் பட்டு அதனுள் வைக்கப் பட்டிருந்தது... மேலும் நனைந்து காய்ந்த சில பல ரூபாய் நோட்டுக் களும், இன்ன பிற பெயர் தெரியாத பொருள்களும் சிதறி விழுந்தன....
பணத்தை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்ட கறுத்த சிறுவன், சிதறிய மஞ்சள் தூளினை உடலில் பூசிக் கொண்டு அந்த எலும்புத் துண்டினை பலம் கொண்டு பாறை மீது போட்டு உடைத்தான்....
பாறைக் கல் மீது பட்டுத் தெறித்ததுதான் தாமதம்....
கறுத்த சிறுவன் " வீல்" என்று கதறியவாறு கிணற்றுக்குள் துள்ள ஆரம்பித்தான்.
இது வரை பயம் பொறுத்து நின்ற திண்ணை வீட்டு சிறுவனோ இப்போது தனையறியாது கூச்சலிடத் தொடங்கினான்...
தான் பற்றி இறங்கிய அதே அரசமரத்தினை பிடித்தவாறு பயம் தொண்டையினை அடைக்க வேக வேகமாக ஏறத்தொடங்கினான் திண்ணை வீட்டு சிறுவன். கிணற்றின் மேற்புறத்தை திண்ணை வீட்டு சிறுவன் அடைந்ததும் ,
கதறல் கேட்டு கிணற்றுக்கு வெளியே இருந்த பொடியனுங்க ஓடி போயி மைதானத்திலிருந்த பெரிய பசங்கள கூட்டி வர குளத்து மேட்டில் கூட்டம் கூடியது.
கதறல் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்க இரண்டு பெரிய பசங்க லுங்கியை மடித்துக் கட்டி கிணற்றினுள் இறங்கத் தொடங்கினர்....

கயிறு கட்டி மேலே கொண்டுவந்தால் கறுத்த சிறுவன் அரை மயக்கத்திலிருந்தான்; கூட்டத்தினை விட்டு சற்று தள்ளி நின்றவாறு பெரியவர்களின் கால் சந்தின் ஊடே கறுத்த சிறுவனைக் கூர்ந்து நோக்கினான்.
" ஏண்டா எதுக்குடா இந்த கத்து கத்தினே! "
" டேய் இவன் நம்ம அம்மி கொத்தறவன் மகன் தானே!"
"இவன எவன்டா மொட்டக் கெணத்துல எறக்கி விட்டது ?"
கேள்விகள் பலவாறாக வந்து விழுந்தன...
மெதுவாய் கண் விழித்தான் சிறுவன்
" மண்டை ஓடு "
" என்ன மண்ட ஓடா ? எங்கடா பாத்த? கெனத்துலையா? "
" டேய் பய எதையோ பாத்து பயந்திருக்காண்டா போயி அவங்கப்பன கூட்டியாடா!"
'' பேயி! ரத்தமா வருது ! மண்ட ஓடு ஒடஞ்சு போச்சு !" வாய்க்கு வந்தாவாறு உளறலானான் சிறுவன்.
" அடேய் ! என்னடா ஆச்சு உனக்கு ! குளத்து மேட்டுக்குவராதேன்னு தலையால அடிச்சுகிட்டேனே கேட்டையா!" அங்கு வந்த அவங்கப்பன் அடித்தொண்டையில் கத்தலானான்.
" ஏய் ... இப்போ எதுக்கு இந்ததத் தொர தொரக்கற! அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றம்ல... எதையோ பாத்து பயந்திருக்காண்டா ... போயி கோயில்ல மந்திரி... சித்தனாலு வெளிய எங்கயும் அனுப்பாத ! கூட்டிட்டு போ ! தள்ளுங்கடா! வழிய விடுறா ! " அங்கிருந்த பெருசு ஒன்னு கூட்டத்த கலைச்சுது ..
பையன தூக்கிக் கொண்டு அழுதவாறே நடக்கத் தொடங்கினான் அப்பன்;
கிழிந்த டவுசரின் சராய்ப் பையினை அழுந்தப் பற்றிக் கொண்டான் கறுத்த சிறுவன்....

திண்ணை வீட்டு சிறுவன் தான் செய்ததையும் , கண்டதையும் வீட்டில் சொல்லவில்லை... சொந்த ஊருக்கு திரும்பினான் அவனது அம்மாவுடன் ...
மறுநாள் பள்ளிக் கூடம் திறக்கப் போகிறது ...
அந்த ஊரில் அவர்களது தோட்டத்திலேயே மொட்டைக் கிணறு இருந்தது!
பழக்கத்தின் காரணமாக வெகு வேகமாய் இறங்கத் தொடங்கினான் திண்ணை வீட்டு சிறுவன்!

புதன், 4 நவம்பர், 2009

" அப்பா "

மறுநாள் விடுதலை;

இந்த நாள் குறித்து ஏங்கிக் காத்திருந்ததெல்லாம் ஒரு வாரம் முன்புவரைதான்.
கைதாகி சிறை வந்த அவனது அந்தக்கால அடிப்பொடியை காணும் வரைதான்.

வந்தவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது மூளைக்குள் குத்திட்டு நிற்பதற்கு முன்பு வரைதான்;

ஏழு வருட சிறை வாசம் வயதைக் கொஞ்சம் தின்றிருந்ததேயல்லாமல் வேறெந்த மாற்றமும் தந்திடவில்லை அவனுக்கு.எதற்காக சிறைப்பட்டோம் என்பதே நினைவிலிருந்து தப்பியிருந்தது.செய்திருந்த குற்றங்களும் கணக்கிலடங்காதவை;இதனிடையில் தன மனைவி,பிள்ளை குறித்து யாதொரு நினைவும் வந்ததாக அவனுக்கு தோன்றவுமில்லை.

உறக்கம் பிடிபடவில்லை அவனுக்கு-மெதுவாய் அவள் முகத்தை நினைவில் நிறுத்த முயற்சித்தான்.தீயாய் எரிந்தது அவனுள்ளம்.தன் மீது சற்றும் பயமின்றி இன்னொருவனுடன் வாழ அவளுக்கு வந்த தைரியம் குறித்து எரிச்சல் மேலிட்டது அவனுக்கு. நாளை அங்கு சென்று எவரையும் நேர் கொண்டு எதிர்க்கக் கூசியது மனம்.
"டேய், கொழந்த குட்டி ஏதும் பெத்துருக்காளா?" என்றான் நடுஇரவில்....
திடுக்கிட்டு விழித்தெழுந்த மற்றவன் இருளை வெறித்த வாறு ,
" இல்லண்ணே மொதல்ல ஆஸ்பத்திரில வெச்சுதான் பாத்தேன்; அது ஒரு மூணு வருஷம் இருக்கும், அதுக்கப்பறம் மாசா மாசம் ஆஸ்பத்திரிக்கு ரெண்டு பேரும்தான் சோடியா வந்து போறதா கேள்வி" என்றான்.

தொடர்ந்தவனாக "கடைசியா ரெண்டு மாசம் முன்னால ராத்திரி ஊரே பாக்க தைரியமா உன் வீட்டுக்குள்ள போறத நானே பாத்தேன்- அதுக்கு மேல என்னத்த சொல்ல ?" என முடித்தான்.

ஆயிரம் வினாக்களுடன் திறந்த சிறைக்கதவு அவனை வெளித்தள்ளி பின் சப்தமிட்டு மூடிக் கொண்டது.
வெறுமையாய் உணர்ந்தான்...
எங்கு செல்வது ?
போக்கிடமின்றி நின்றவனை பச்சை போர்டு வைத்து வரவேற்றது சிறைக்கு வெளியிலான புது உலகம்...
வெறி தீரக் குடித்தான் எனலாம்.பிரஞையின்றி கிடந்தான் சாலையில்,உச்சிப் பொழுதின் வெப்பமும் மிதமிஞ்சிய போதையும் நிலை குலையச் செய்திருந்தன.
உதடுகள் மட்டும் அவளைத் திட்ட அரைகுறை வார்த்தைகளை உதிர்த்த வாறு இருந்தன.
*******

இரவானது ...
மெதுவாய் நெருங்கினான் வீட்டை - பூட்டப் பட்டிருந்தது. கூரையின் இடுக்கிலிருந்து சிறு துவாரம் வழியே சாவியை எடுத்து திறந்தான்.... கதவின் சத்தம் கேட்டு பக்கத்துவீட்டுக் கிழவியின் மாடியிலிருந்து எழுந்தோடி வந்து அவனது தொடை இறுகக் கட்டிக் கொண்டு " அப்பா " என்றான் ஈன ஸ்வரத்தில் ஒரு சிறுவன். வாரிஎடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தான்.
கையோடிருந்த பொட்டலத்தினைப் பிரித்து உணவை ஊட்டத் தொடங்கினான்...
நிசப்தத்தை கலைத்தது ஒரு கேள்வி "அம்மா எங்கப்பா ".

******

கோபம் உச்சம் தொட்டது ; இருவரையும் கொல்வது- வேறு வழியெதுவும் தோன்றவில்லை அவனுக்கு .

இருட்டியிருந்தது ... போதை தெளியவில்லைஎன்றாலும் நடக்கத் திராணியிருந்தது அவனிடம் இப்பொழுது;
வீடுநோக்கி நடக்கத் தொடங்கினான்...
*******



தினம் தினம் கேட்கப்படும் பதிலில்லாக் கேள்வியினை அழுகையாய் தொடர்ந்து தூக்கமாய் முடிக்கத் துவங்கியிருந்தான் சிறுவன். அழுகை நின்ற பாடில்லை. மார்போடு அணைத்தபடி மெதுவாய் தட்டிக் கொடுத்தான்...


******

வீடிருந்த தெருவை அடைந்தான்; முற்றிலுமாய் மாறிப் போயிருந்தது. நினைவுகளில் தூசி தட்டி ஒவ்வொன்றாய் தேடி பின் அடைந்தான் .தாழிடாத கதவினை மெதுவாய் திறந்து பார்க்கையில் ... கடைசியாய் கைக் குழந்தையாய் பார்த்த தன் மகன் இன்னொருவன் மார்பில் சாய்ந்தவாறு உறங்கியிருந்தான்.சுவற்றில் அறைந்திருந்த ஆணியில் தொங்கியது வெகு பாடுபட்டும் நினைவில் கொணர முடியாது தவித்த அவளின் படம் ஒரு பிடி கதம்பப் பூவுடன் .... அணியத் தொடங்கியிருந்தது அதனருகில் கருமை படிந்த மண் விளக்கு ...

புரண்டு மீண்டும் படுத்த சிறுவனின் வாய் குழறியது மெதுவாக " அப்பா "
என ...

தனையறியாது அவனும் முணுமுணுத்தான் " அப்பா ",


மெதுவாய் கதவடைத்தான்...
சிறுவனின் கன்னங்களில் உலர்ந்திருந்த கண்ணீர் தடம் செலும் வழி எதுவெனப் புரியவில்லை அவனுக்கும் ......

திங்கள், 2 நவம்பர், 2009

சதுரங்க போர்க்களம்


எதிரெதிரில் இருவரும் ;
இது
மட்டும் நிரந்தரம்...

உடை தளர்த்தி- எனை அழைத்து- படை வளைத்துச் சிறை பிடிக்க
முதல் யாமம் இதழ் யாகம்.

சதுரங்க போர்க்களம்
புதிர் கொண்ட சூட்சமம்


இதழ் பிணைத்து - உடல் அணைத்து- மடை திறக்கத் தடை உடைத்தேன்
அதில் மூழ்கும் யுகம் யாவும்;

தகிக்கின்ற தேகம் ;
உயிர் கொன்ற மோகம்.

யுகம் முழுக்க தவம் கிடந்து;
உன் மடிதவழ உயிர் பிரிந்தால்

சிதை சேரும் என் உடல் வேகும்.

புதன், 28 அக்டோபர், 2009

அதே கைகள்;

கனவின் நடுவில் மயக்கம் கலைந்தது மிக இயல்பாக,
கண் எதிர்ப்பட்டது காட்டு மிருகமொன்றின் கூரிய கொம்பு.
திடுக்கிடவில்லை என்றும் உரைப்பதற்க்கில்லை....

சூழலின் வெப்பம் மதியமென்று உணர்த்தியது....
நர நடமாட்டம் தெரிந்ததும் போலியாய் விழி மூடி மௌனித்திருந்தேன்.

மயக்கத்திற்கு முந்தய நிகழ்வுகளில் செல்ல மனம் யத்தனித்தது,
நிலை குலைந்த அந்த நொடி தொடங்கி மெதுமெதுவாய் விரிந்தது நினைவு ...

மீன்கள் ஏதுமின்றி நெடுநாளாய் நீர் வளர்த்த கண்ணாடிக் குடுவை அது;
அதற்குள் மிக அழகாய் மின்னும் குறுவாள் ஒன்று.
இடப்புறம் பார்த்தேன் - எனை மூர்கமாய் தாக்கிய அதே கைகள்; நன்றாய் நினைவிருந்தது ...
இப்போது இல்லை- எங்கேனும் சென்றிருக்கக் கூடும்.



மெதுவாய் அதிர்வின்றி நகர்ந்தேன்,
கைக்கெட்டா உயரத்தில் குடுவை-
என் கரங்களின் இயல்பான நடுக்கம் பலமாய் அதனை அசைக்க
விழுந்துடைந்தது அமைதிக் குடுவை ....
கண்மூடித் திறந்தேன் - அதுவரை எவரும் பிரவேசித் திருக்கவில்லை;
கூர் முனைகள் சில்லுகளாய் சிரித்தன-

கைக்கருகில் என் ப்ரிய வாள்;
கூர்முனை தடவி அருகில் கொணர்ந்தேன்.

முதுகின் நடுவில் எதோ பாய்ந்தது-
கதறல் மறந்து திரும்பி பார்த்தேன்.

தாக்கிய கரம் நீண்டவாறிருந்தது;

கண்ணீர் ஈரம் காயும் மட்டும் நினைவு சென்றது- பின்னர் நின்றது.

முழுதும் ஈரம் உணர்ந்தேன்
கலைந்தது கனவு
அழுகை பீறிடத் தொடங்கும் நொடியில்

தொட்டில் விலக்கி வாரிஎடுத்தது ; மறக்கவில்லை
அதே கைகள்.....

திங்கள், 26 அக்டோபர், 2009

ஒரு கோப்பை பிரளயம்...


ஆழ்கடல் நாவாய்- அது போல் ஓரறை;
நான்,இருள் -
என்னுடன் அவளும் ....

முத்தத் தொனியில் மூர்க்கம் கொஞ்சம்
ரத்தச் சிவப்பு மார்பில் மிஞ்சும் -

சக்கரப் பற்கள் முறுக்கிச் சுழன்றது
காலயந்திரம்
இருளில் மட்டும் இயல்பில் திரிவது
மூடுமந்திரம்!

உதிரம் ஓடும் நாளம் முழுதும்- ஊடுபரவும் உயிரினமுதம் ;
விழிகள் நான்கும் சரிந்த நிலையில் ,
வியர்வை உலர்ந்தது மூச்சுப் புயலில்.

சதிரும் ,சமரும் ,சகதிக் கூத்து
கோப்பை மதுவில் மூன்றும் சேர்த்து!

சனி, 24 அக்டோபர், 2009

விடியல்


முடிவோ எமக்கிலை; மரணம் சொற்பிழை-
உலகம் கற்சிலை,
உமிழ்வோம் எச்சிலை;
சிறைகள் அடைக்கட்டும்,
சிதைகள் எரிக்கட்டும் ,
ரணங்கள் வதைக்கட்டும்,
பிணங்கள் திசை எட்டும்;


முல்லை துஞ்சிய முதுபெரும் புலிக்கு முப்பதாண்டுகள்
மூச்சுத் திணறினீர்;
முள்வேலிக்குள் ஜனிக்கும் புலியால் அற்றுத் தீர்வீர்!
முற்றும் திண்ணம்.

ஈழம் ஓர் நாள் நனவாய் மலரும் - அதன்
தேசிய கீதமும் என் விரல் எழுதும்.